பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தியது ஏன்..? வெளியான பரபரப்பு தகவல்கள்

 
Tanjore

தஞ்சை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை பட்டுக்கோட்டையில் போலீசார் மீட்டனர்.

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவர் ராஜலட்சுமி (வயது 22) என்பவரை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ராஜலட்சுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 5-ந் தேதி காலை பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் மாடிப்பகுதியில் உள்ள வார்டில் ஒரு பெண் தனது உறவினரை பிரசவத்திற்கு அனுமதித்ததாக கூறி ராஜலட்சுமியிடம் பழகி உள்ளார்.  4 நாட்களாக  ராஜலட்சுமியிடம் உதவுவது போல நடித்த அப்பெண், நேற்று குழந்தையை கடத்திச்சென்றார்.  

இதை அறிந்த குழந்தையின் பெற்றோர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தை கட்டப்பையில் வைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது.

தனிப்படை அமைத்த போலீசார், குழந்தையை கடத்தி சென்ற அந்த பெண்ணை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில்,  கடத்தப்பட்ட பெண் குழந்தையை பட்டுக்கோட்டையில் போலீசார் மீட்டனர். சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர்.

விசாரணையில் கடத்தி சென்ற பெண் விஜி என்றும், தான் கர்ப்பம் அடைந்து இருப்பதாக உறவினர்களை நம்ப வைத்த விஜி தஞ்சை மருத்துவமனையில் ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ரவளி பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, குழந்தை கடத்தல் நடந்த 14 மணிநேரத்திற்குள் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்திற்கு உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு மிக நன்றிகள், பாராட்டுக்கள். குழந்தைக்கு டயப்பர் வாங்கிய கடையை கூட கண்காணித்து குழந்தையை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அவர் தனக்கு தேவையான நபரிடம் இருந்து சொத்தை வாங்க, குழந்தையை கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல் துறை அதிகாரிகள் தங்கி, பணியில் ஈடுபட அறை ஒதுக்கி கொடுப்பதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

குழந்தையை கடத்தியவருக்கும் - ஆட்டோ டிரைவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. குழந்தையை பெண்மணி கட்டைப்பையில் போட்டு தூக்கி சென்றுள்ளார். குழந்தை அழுதிருந்தால் கூட டிரைவருக்கு சந்தேகம் எழுந்து இருக்கும். ஆனால், குழந்தை உறங்கி இருந்ததால், ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் எழவில்லை. சாதாரணமாக மருத்துவமனைக்கு வந்து செல்கிறார் என்று நினைத்துள்ளார். ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலின் பேரிலேயே போலீஸ் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பெண்மணியை கண்டறிய முடிந்தது என கூறினார்.

From around the web