தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்..? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...

 
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்..? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ந் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தமிழக மக்களின் இதயங்களில் குடிகொண்டிருந்த இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற முதல் சட்டமன்றத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.

மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். அவர்களில், ஆண்கள் 2.26 கோடி பேரும், பெண்கள் 2.31 கோடி பேரும் வாக்குகளை செலுத்தினர்.

வாக்குப்பதிவுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கொரோனா பரவல் சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதால், தமிழகம் முழுவதும் துணை ராணுவ படையினர் உள்பட 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

From around the web