தமிழ்நாட்டில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய முக்கிய தகவல்

 
Anbil

தமிழ்நாட்டில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே அமைந்துள்ள காட்டூர் காவேரி நகர்ப் பகுதியில் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 15-ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு வல்லுநர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் முடிவெடுப்பார்.

முதல் 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளைப் பள்ளிக்கு வரவைப்பது தான் முக்கிய நோக்கம். இதற்காகப் புத்தாக்க பயிற்சிகள் நடத்தப்படுகிறது. அதன் பின்னரே முறையான வகுப்புகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து நீட் குறித்து பேசிய அவர், “தமிழ்நாடு முதல்வர் சட்டப்பேரவயில் பேசும் பொழுது இது எனது அரசு இல்லை, நமது அரசு என்று குறிப்பிட்டார். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவயில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது, அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டு இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் நீட் தேர்வு கடைசி நீட் தேர்வாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்று, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழ்நாடு முதல்வருக்கு உள்ளது” என்றார்

From around the web