என்ன செய்யப் போகிறார் சின்னம்மா! டிடிவி தினகரன் கணக்கு என்ன?

 
என்ன செய்யப் போகிறார் சின்னம்மா! டிடிவி தினகரன் கணக்கு என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது. அதிமுகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும். அந்தக் கட்சியின் தலைமையில் மாற்றம் வருமா? என்பது தான் அதிமுக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள கேள்வி!

அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிக்கை விட்டு அமைதியாக இருக்கிறார் சின்னம்மா சசிகலா. கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றியை தடுத்து நிறுத்தி செக் வைத்து விட்டோம் என்று நம்புகிறார் டிடிவி தினகரன். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஐந்து இடங்கள் கிடைத்தால் ஆச்சரியம் என்கிறார்கள். வடக்கே பாட்டாளிகள் கை கொடுப்பார்கள், மேற்கே சொந்த சமூகம் கை தூக்கி விடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில் உள்ளார்.

60 இடங்கள் வரை பெற்று விட்டால் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் முழுமையாக வந்துவிடும் என்பது எடப்பாடியாரின் எண்ணம் என்கிறார்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று அமைச்சர் உதயகுமாரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தெற்கே பேசியது, வடக்கேயும் எதிரொலித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதிமுக துணையுடன் பாமக சில எம்.எல்.ஏ.க்களைப் பெறக்கூடும். ஆனால் அதிமுக வடக்கேயும் ஜெயிக்காது என்பதே பேச்சாக உள்ளது.

மேற்கு மண்டலத்தில் வேலுமணியை ஊழல் மணியாக சித்தரித்ததில் திமுகவுக்கு பெரும் வெற்றி என்றே கூறப்படுகிறது. அமைச்சர்கள் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்பதே கருத்தாக உள்ளது. கார்த்திகேய சிவசேனாபதி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் பலமாக மாறியுள்ளதையும். கரூரில் செந்தில் பாலாஜியின் அயராத உழைப்பையும் சுட்டிக்காட்டும் உடன்பிறப்புகள், கொங்கு மண்டலம் இனி திமுக வசம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆக,  1996 ஆண்டுக்கு அடுத்த படியாக, அதிமுகவுக்கு தோல்வி பலமாக இருக்கும் என்றே தெரிகிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிக்கொடியை பறக்க வைக்க வேண்டும் என்று அமித் ஷா துடியாகத் துடிக்கிறாராம். தாமரை வெற்றி பெறவில்லை என்றால் இரட்டை இலையை தாமரையாக்கிக் கொள்ளவும் திட்டம் ரெடியாம்.

சின்னம்மாவிடமிருந்து சரியான சிக்னல் வராததால் ஓ.பி.எஸ் தாமரையை தனது சின்னமாக ஏற்றுக்கொள்ளத் தயாராம். ஊழல் குற்றசாட்டுகளுக்குள்ளாகியுள்ள சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என மூன்றில் ஒரு பங்கு சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலையை கழுவிவிட்டு தாமரையில் தஞ்சம் அடைய ரெடியாக உள்ளதாகவும் தகவல்கள் உலவுகிறது.

ஓ.பி.எஸ் அதிமுகவை விட்டு விலகிச் செல்வதும்,  எடப்பாடியாரை அரவணைத்துச் செல்வதும் தான் அதிமுகவுக்கும் தனக்கும் நன்மையாக இருக்கும் என்பதே சின்னம்மாவின் கருத்தாக இருக்கிறதாம். தொண்டர்கள் மூலம் கண்ணீர்ப்படலம் அரங்கேற்றப்பட்டு சின்னம்மாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமாம்.  பொதுச்செயலாளர் சசிகலா, ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார், இணை ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரன் என சமரச முயற்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. சின்னம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தால் உடனடியாக அதிமுக - அமமுக இணைப்பு  நடத்துவதில் டிடிவி தினகரனுக்கு எந்த தயக்கமும் இல்லையாம்.

ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவுவதை சாக்காக வைத்தே, இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று உதறி விட்டு, ”அம்மா வழியில் அதிமுக” என்ற புதிய முழக்கத்துடன் கட்சியைப் பலப்படுத்துவார் சசிகலா என்கின்றனர். புதிய உடன்படிக்கையின் படி 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

From around the web