நாம் நம் குடும்பத்தை தூக்கி நிறுத்துவோம் வாங்கப்பு! B.E. எனும் திறவுகோல்!!

 
College

B.E எனும் படிப்பானது தகுதி, தராதரம், கல்லூரி குவாலிடி எல்லாவற்றையும் தாண்டி வாய்ப்பு எனும் ஒற்றைப்புள்ளியில் தமிழகத்தின் மிடில்க்ளாசை புரட்டிப்போட்ட திறவுகோல். அதை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ளி நகையாடலாம். தரம் கொண்டு நிராகரிக்கலாம். உருப்படியா ஒன்னுகூட கண்டுபுடிக்கலன்னு கரிச்சுக்கொட்டலாம்.

ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக இந்த படிப்பும் அதைக் கொடுக்க திறக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளும் திறந்துவிட்ட வாய்ப்புகள் லட்சோபலட்சம். ஐடி வேலைக்கான மனிதவளத்தை அள்ளியள்ளி கொடுத்தவை கொடுத்துக்கொண்டிருப்பவை இந்த கல்லூரிகள் தான்.

விஞ்ஞானிகள் உருவாகட்டும். தரம் வாய்ந்த அண்ணாமலைகள் உருவாகட்டும். புத்திசாலி அறிவாளி மாணவர்கள் உருவாகட்டும். ஆனால் இன்றைக்கும் எதிர்காலத்துக்கும் தேவையான IT AI SW HW Network Security *aaS BizDevSecOps துறைகளின் டிமாண்டுக்கு இருக்கும் சப்ளையை ஏதாச்சும் சொல்லி கெடுத்து விட்றாதிங்க அறிவாளிங்களே!

மேற்கண்ட துறைகளின் எந்த பட்டப்படப்பை வேண்டுமானாலும் கிடைக்கும் எந்த கல்லூரியலும் எடுத்து படிங்க. வெற்றிகரமாக முடிங்க. வாய்ப்பை பயன்படுத்தி மேல வாங்க. 16 வருட படிப்பு. முடித்தவுடன் கல்லூரி தரமெல்லாம் பின்னாடி போயிரும். அது ஒரு சாவி. அது திறக்கும் உலகின் வாய்ப்புகள் அனேகம். ஆமாம், இது மாபெரும் வேலைவாய்ப்பு உலகின் வாசல் சாவி மட்டுமே. உள்ளே வந்து எப்படி களமடுவது என்பது உங்கள் தனிப்பட்ட திறமை.

தகுதி தரம் தராதரம் பேசுபவர்கள் எல்லாம் அவர்கள் பிள்ளைகளை விஞ்ஞானிகள் ஆக்கட்டும். நாம் நம் குடும்பத்தை தூக்கி நிறுத்துவோம் வாங்கப்பு. கிடைத்த கல்லூரியில் படிங்க. முதல் வகுப்பில் அரியர் எல்லாம் எழுதி முழுக்க முடிங்க. ஏதேனும் ஒரு துறையில் நுழைய என்னென்ன செய்யனுமோ அதைசெய்து வாய்ப்பை கைப்பற்றும் வேலையை பாருங்க.

எத்தனையெத்தனை முட்டுக்கட்டைகள், பயமுறுத்தல்கள், கேலிகள். கோழிப்பண்ணைக, 2 டன் காண்டோம், கலாச்சார கேடு, லிவிங் டுகெதர், பப்பு குடி என எத்தனை அவச்சொல் லேபில்கள். இவர்கள் யாருக்கும் விளையாங்குடியில் இருந்து ஒரு பெண்ணோ பையனோ படிச்சு முடிச்சி வேலை வாங்கி அதை திறம்பட செய்து ஆங்கிலம் கற்று உலகம் சுற்றி குடும்பம் நிமிர்த்தி கட்டைப்பையோடு அப்பாம்மாவை கூட்டிவந்து நயாகரா காட்டும் வெற்றிக்கதைகளின் வலிகள் தெரியாது. சுந்தர் பிச்சை மட்டுமே வெற்றியாளரா என்ன? உள்நாட்டில் நல்ல வேலையிலும் வெளிநாட்டுக்கு விமானமேறும் ஓவ்வொரு பட்டதாரியும் வெற்றியாளன் தான்.

வாய்ப்பு! அதனை அடைய எந்த தகுதி தராதர சொல்லாடலிலும் மயங்கிறாதிங்க. ஏனெனில் இவைகளை பிரசங்கிக்கும் எவரும் இதே வாய்ப்புகளை தன் குடும்பத்தாருக்கு தவற விடுவதேயில்லை, இதுவரைக்கும் தவறவிட்டதுமில்லை

- இளவஞ்சி

From around the web