துபாயிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்..!

 
Vijayakant

துபாய் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு விஜயகாந்த் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த விஜயகாந்த், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் புறப்பட்டு சென்றார்.

அப்போது அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து விஜயகாந்தை வேகமாக தள்ளிக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண நலம் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். சிகிச்சை பெற்று குணம் அடைந்து விஜயகாந்த் வீடு திரும்பிய செய்தி கேட்டு விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web