திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா காலமானார்

 
Veerapandi-Raja

வீரபாண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் வீரபாண்டி ராஜா காலமானார். அவருக்கு வயது 58.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வீரபாண்டி ராஜா உயிரிழந்தார். தனது பிறந்தநாளுக்கு தந்தை வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்து வந்த அவர், இன்று காலை தனது பிறந்தநாளை ஒட்டி, புலாவரியிலுள்ள அவரது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த செல்வதாக இருந்தார். இதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த வீரபாண்டி ராஜா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சேலத்து சிங்கம் என்று போற்றப்படும் வீரபாண்டியாரின் மகனான வீரபாண்டி ராஜா இனிமையாக பழகி, தன்னுடைய எளிமையான குணத்தால் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர், எந்த பொறுப்பையும் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர் என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் சேலத்துக்கு அரசு விழாவுக்கு சென்றிருந்த போது கூட, வீரபாண்டி ராஜாவை சந்தித்து பேசியதாக நினைவுகூர்ந்துள்ள முதல்வர், அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை என உருக்கமாக கூறியுள்ளார். வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது?, இந்த இழப்பில் இருந்து தன்னை எப்படி தேற்றிக் கொள்வது என தெரியவில்லை என்ற முதல்வர், வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வது போல என வேதனை தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி ராஜா மரணம் திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web