தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்! மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

 
Radhakrishnan

தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படாது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 18 வயதினர் உட்பட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பலரும் தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பதாக கூறினார். கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் காலியாகிவிடும் என்றும் 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் வந்ததாக கூறினார்.

மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தரவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படாது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது என அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றும் மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது என்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜூன் 6-ம் தேதி முதல் மீண்டும் துரிதமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web