உதயநிதி ஸ்டாலினின் புதிய பாதை!  தமிழ்நாட்டு அரசியலில் இடம் இருக்கா?

 
உதயநிதி ஸ்டாலினின் புதிய பாதை! தமிழ்நாட்டு அரசியலில் இடம் இருக்கா?

சீனியர்களை ஓரங்கட்டி வந்த பட்டத்து இளவரசர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எப்போது  விமர்சனம் செய்தார்களோ? அப்போதே இந்திய அளவில் அறிமுகமான அரசியல்வாதி ஆகிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

வாரிசு அரசியல் என்று உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்பவர்கள், ஓவர் நைட்டில் வேட்பாளராகி எம்.பி.யும் ஆகி விட்ட ஓ.பி.எஸ் ரவிந்திரநாத் பற்றி மறந்து கூட பேசமாட்டேங்கிறாங்களே! பார்த்தீங்களா என்று ஒரு அரசியல் விமர்சகர் நம்மிடம் கேள்வி எழுப்பினார்!

அட, ஆமால்ல... எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கிற வரைக்கும் ஓ.பி.எஸ்க்கு மகன்கள் இருப்பதோ, அவர்கள் அதிமுக கட்சியில் இருக்கிறார்கள் என்றோ எத்தனை அதிமுக காரர்களுக்குத் தெரியும்? ஆனால் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி என்பதும் சினிமா தயாரிப்பாளர், நடிகர் ஆவதற்கு முன்னரே தாத்தாவுக்காகவும் அப்பாவுக்காகவும் வீதிவீதியாக வாக்கு சேகரித்தார் என்பதும் திமுகவினருக்குத் தெரியும்.

தயாரிப்பாளர், நடிகர் என்ற அடையாளம் உதயநிதிக்கு பொதுமக்கள் மத்தியிலும் ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது. மகனை அரசியலுக்கு அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தவரை, மகன் உதவியாக இருந்தால் அப்பாவின் அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று குடும்ப ஜோதிடர் ஒருவர் சொல்லவும், அம்மாவின் அழுத்தமும் தான் உதயநிதி அரசியலுக்கு வந்த காரணம் என்கிறார்கள் நெருக்கமான சிலர்.

அரசியலுக்கு வந்து விட்டோம், அப்பா சொல்வதைக் கேட்டு நடப்போம் என்றில்லாமல், தனக்கான ஒரு பாதையையும் மிகக்குறுகிய காலத்திலேயே உருவாக்கிக் கொண்டார் உதயநிதி என்பது தான் பொதுவான அரசியல் பார்வையாளர்களின் கருத்து. செல்லுமிடமெல்லாம் நடிகர் என்பதைத் தாண்டி கலைஞரின் பேரன் என்ற அடையாளம் தான் அவரைக் காணவரும் கூட்டத்திற்கான காரணம் என்பதை புரிந்து கொண்டார். தன்னுடைய எளிமையான அணுகுமுறை மூலம் அந்த மக்களின் மனதில் ஒரு இடத்தையும் பிடித்து விட்டார். கேள்வி - பதில் பாணியிலான உரையாடல் போன்ற அவருடைய பிரச்சார யுத்தி மக்களை ஈர்த்து விட்டது என்பதும் உண்மை.

இந்த இடத்தில் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்தை கம்பேர் செய்து பாருங்கள்! எத்தனைக் கூட்டங்களில் பேசியிருப்பார்? ஏதாவது பெரிய வீச்சு இருந்ததா? ஆனால் ஒற்றை செங்கலைக் காட்டி தேசிய ஊடகங்களின் கவனத்தை மட்டுமல்லாமல், பிரதமர், உள்துறை அமைச்சரின் வாயிலும் விழுந்து விட்டார் உதயநிதி! அதுவே அரசியலில் அவருக்கான இடத்தை உறுதி செய்து விட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய ஒவ்வொரு நிர்வாகியையும் அவர்களுடைய வீட்டிற்கேச் சென்று நன்றி தெரிவித்து, அந்த குடும்பத்தில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தொகுதியில் மக்களுக்குத் தேவையான பணிகளை செய்து கொடுப்பதற்கு, இந்த நிர்வாகிகளுக்கு சில வழிகாட்டுதல்களையும் இப்போதே சொல்லி வைத்துள்ளாராம். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மீண்டும் ஒரு வி.ஐ.பி தொகுதியாக மட்டுமல்ல, தமிழ்நாட்டின்  அடையாளத் தொகுதியாகவும் மாறினால் ஆச்சரியமில்லை. .

அடுத்த எம்.பி. தேர்தலில் ஓ.பி.எஸ்.ரவிந்திரநாத் வெற்றி பெறுவாரா? கட்சியில் அவருக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்குமா என்பதில் நிச்சயமில்லை. ஆனால் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு  உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் தமிழ்நாட்டின் அரசியல் இல்லை என்பதே உண்மை என்று முடித்துக் கொண்டார் மூத்த அரசியல் விமர்சகர்!

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய நாயகன் உருவாகிறான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

From around the web