முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு! இதையும் செஞ்சிடுங்களேன் ப்ளீஸ்!!

 
Stalin

எனது சொந்த வேலை காரணமாக நான் DMS வளாகத்தில் பலநாட்கள் காத்துக் கிடந்திருக்கிறேன். அப்படியான ஒருநாளில் ஒரு மரத்தடியில் நான் இருந்தபோது, எனது அருகில் இரண்டு சகோதரிகள் வந்து உட்கார்ந்தார்கள்.அவர்களிடம் பேசியபோது அவர்களின் கதை என் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது.

அந்த இரண்டு சகோதரிகளும் செவிலியர்கள். ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்பவர்கள். அவர்களது அப்போதைய சம்பளம் ரூ 7700 என்று நினைவு. இரண்டு பேர் கையிலும் ஒரு கைக்குழந்தை. ஒருவர் சென்னைக்காரர் அவரை கிருஷ்ணகிரியில் பணி நியமனம் செய்திருக்கிறார்கள். இன்னொருவர் கிருஷ்ணகிரிகாரர் அவருக்கு சென்னையில் பணிநியமனம் செய்திருக்கிறார்கள்.

சென்னைக்காரர் சென்னைக்கும் , கிருட்டிணகிரிக்காரர் கிருட்டிண்கிரிக்கும் மனமொத்த மாறுதல் ( mutual transfer ) வேண்டி, கிடைக்கும் ஓய்வு நாளில் எல்லாம் DMS வளாகத்திற்கு பலமாதங்களாக நடையாய் நடக்கிறார்கள். ஆனால் காரியம் மட்டும் நடக்கவில்லை. இதைச் செய்து கொடுப்பதில் துறைத்தலைவருக்கு என்ன பிரச்சனை.

என்ன பிரச்சனை என்று நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியத்தில் யாரும் இல்லை. இன்று அவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகியிருக்கிறது என்ற செய்தி நம் அனைவர் நெஞ்சையும் குளிர வைக்கும் செய்தி. அனைத்து துறைகளிலும் அரசுப்பணிகள் பாதிக்காத வகையில் விருப்ப மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடக்க தலைவர் ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும்.

- திருநாவுக்கரசன் மனோரஞ்சிதம்

From around the web