இது டிரெய்லர் தான்... இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள்... அமைச்சர் சேகர்பாபு

 
Sekarbabu

கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுதும் 12 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாத கோயில்களை கணக்கெடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இதனிடையே சென்னை வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது. சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வளாகங்கள், கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது. மீட்கப்பட்ட கோவில் நிலங்களை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “கோயில் நிலங்களில் குடியிருப்போர் யாரும் அந்த இடத்திற்கு உரிமைக்கோர முடியாது. கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது. தமிழ்நாடு அரசு 30 நாட்கள் நிறைவு செய்துள்ளது. இது டிரெய்லர் தான். இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள். யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும். எந்தெந்த கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை என்பது கண்டறியப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் தெரிவிப்பார்” என்று அவர் கூறினார்.

From around the web