சமூகநீதிக்கு காப்புரிமை கொண்டாடுபவர்களுக்கும் இதைச் செய்யலாம் தானே!

 
சமூகநீதிக்கு காப்புரிமை கொண்டாடுபவர்களுக்கும் இதைச் செய்யலாம் தானே!

இன்றைய உலகில் டாகடர் மகன் டாக்டருக்கு தான் படிக்கிறார், என்ஜினீயர் மகன் பி இ தான் படிக்கிறார். வக்கீல் மகன் பி எல்  தான் படிக்கிறார். அரசு பணியாளர் மகன் அப்பா ஓய்வு பெறுவதற்குள்  அரசுப்பணியில் நுழைக்க படுகிறார். பெரிய வர்த்தகர், வியாபாரி மகன்  அதே தொழிலுக்கு வருகிறார். அரசியல் தலைவர் மகன்  அவருக்கு வாரிசாக ஆகிறார். இது நவீன சனாதன தர்மம்..நான் முனிசிபல் கவுன்சிலராக இருந்த காலத்தில் [ 1986 - 91 ] துப்புரவு தொழிலாளர் குடியிருப்பு விழாவில் பேச அழைத்தனர். துப்புரவு தொழிலாளர் பிள்ளைகளை வேறு வேலைக்கு அனுப்புங்கள் இந்தப்பணிக்கு வாரிசு உரிமை கேட்காதீர்கள், யாரோ பார்த்துக்கொள்ளட்டும்.

உங்கள் பிள்ளைகளும் டாக்டர் ஆகலாம். நகராட்சி மருத்துவமனையில் கடைநிலை ஊழியராக வேலைபார்ப்பவர் பிள்ளைகள் அதே மருத்துவமனைக்கு டாக்டராக செவிலியராக பதவிக்கு வரட்டும் என பேசினேன். அதற்கு வெளியில் தெரியாத கடும் எதிர்ப்புகள் தோன்றின. ஏப்ரல் 11 அன்று மதுரையில் சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு சார்பாக  துப்புரவு தொழிலாளர் பிள்ளைகளுக்காக மட்டும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. வேலை வாய்ப்பு கிடைக்காத தகுதியான இளைஞர்களுக்கு வழிகாட்டவே இந்த முகாம் நடத்தினோம்.

துப்புரவு தொழிலாளர்களின் பிள்ளைகள் பெற்றோர் செய்த அதே வேலை நாடுகின்றனர். அந்த போக்கை மாற்றுவதே எங்கள்  நோக்கம்  டிவிஎஸ், லார்சென் டூப்ரே   போன்ற நிறுவனங்கள் 110 இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளன, இது எங்களின்  5 வது முயற்சி என்று சட்டக் குழு சகாய பிலாமின் ராஜ் தெரிவித்தார். 

இதுபோன்ற முகாம்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கும் , இனமான போராளிகளுக்கும் , சமூகநீதிக்கு காப்புரிமை கொண்டாடுபவர்களுக்கும்  ஏன் ஆர்வம் இல்லை ? கட்சிகளிடம் நிதி இல்லையா? ஒடுக்கப்பட்டோருக்காக முன்னின்று போராடுவேன் என உறுமும் தலைவர்களும் இப்படி வேலை வாய்ப்புகளை ஏன் அடையாளம் காட்டவில்லை ?  இந்த முகாம் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்த இளைஞர்கள்  தங்கள் சொந்தபந்தங்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டவேண்டும், ராணுவம், காவல்துறை விண்வெளி ஆய்வு துறைகளிலும் கால் பதியுங்கள்.

-வி.எச்.கே. ஹரிஹரன்

From around the web