தூத்துக்குடியில் தரையிறங்காமல் திரும்பிச் சென்ற விமானம்!!

 
Indigo-plane-not-landing-in-thoothukudi

தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் சென்னையிலிருந்து வந்த விமானம் தரையிறங்க முடியவில்லை.

பகல் 12:30 மணியில் சென்னையில் புறப்பட்ட இண்டிகோ விமானம், தூத்துக்குடியை நெருங்கியதும் தாழ்வான உயர்த்தில் வட்டமிட்டது.

விமான நிலையம் அருகே வரையிலும் வந்த விமானம், சட்டென வேகம் எடுத்து மேல்நோக்கி உயரமாகப் பறக்கத் தொடங்கியது.

உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பதற்கு வந்திருந்தவர்கள், விமானம் மீண்டும் உயரே செல்வதைப் பார்த்துதும்்ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பின்னர் மதுரையை நோக்கிப் பறந்தது அந்த விமானம். மதுரையிலும் மழை கொட்டியதால் அங்கேயும் தரையிறங்க முயன்ற விமானியின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. பின்னர் திருச்சிக்கு பறந்துள்ளனர். 

“கீழே விமான நிலையத்தின்  சுற்றுவட்டார கிராமங்களும் நீர்நிலைகளும் தெளிவாகத் தெரிந்த நிலையில் திடீரென மீண்டும் உயரே பறக்கத் தொடங்கியதும் சற்றே பயம் ஏற்பட்டது.

வெகு நேரமாக கேப்டனின் அறிவிப்பு வராததால், விமானத்தை யாரோ கடத்தி விட்டார்களோ? என்ற அச்சம் கூட ஏற்பட்டது.

மேகமூட்டமும் மழையுமாக இருந்ததால் தரையிறங்குவதற்கு தேவையான பார்வை சரியாக தெரியவில்லை என்பதால், மதுரைக்கு செல்கிறோம் என்ற அறிவிப்பை கேட்டதும் தான் சற்று பயம் விலகியது.

ஆனால் அதன்பிறகும் நீண்டநேரமாக பயணம் தொடர்ந்ததால், மீண்டும் சென்னைக்கே திரும்புகிறதோ என்ற கேள்வியும் எழுந்தது.

பின்னர் மதுரையிலும் மழை காரணமாக இறங்க முடியவில்லை என்று திருச்சி நோக்கி விமானம் சென்றது. சுமார் 3 மணிநேரம் வானில் பறந்த விமானம் பிற்பகல் 3:15 மணியளவில் திருச்சியில் விமானம் தரையிறங்கியது.  தரையிறங்கினால் போதும் என்று சக பயணிகள் பெருமூச்சுடன் நிம்மதி அடைந்தனர்.

தூத்துக்குடி செல்ல வேண்டிய பயணிகளுக்கு  தரை வழியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமானப் பணிப்பெண் கூறியதாக,” விமானத்தில் இருந்து பயணி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

சென்னை செல்ல தூத்துக்குடியில் காத்திருந்த பயணிகளும், நண்பர்களையும், உறவினர்களையும் வரவேற்க வந்திருந்தவர்களும் ஏமாற்றமடைந்தனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தை விரைவில் திருச்சி, கோவை நகரங்கள் போல் தரம் உயர்தத வேண்டும் என்ற கோரிக்கையையும் அங்கே கேட்க முடிந்தது.

மாவட்ட எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் கவனத்திற்கு கொண்டு செல்வதாக, விமான நிலையத்திற்கு வந்திருந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளருமான ஆஸ்கர் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்படுமா, அண்டை நாடுகளுக்கிடையே பன்னாட்டு சேவைகள் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

From around the web