லிப்ட் கேட்டு வாலிபரை தாக்கிய நபர்... கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்கள்!!

 
Bike-robbery

ஆவடி அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம வாலிபர் ஒருவர் வண்டியை வழிமறித்து லிப்ட் கேட்டார். அந்த நேரத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள மோதிரம், தங்க சங்கிலியை பறித்தனர்.

மேலும் அஜித்குமாரின் செல்போனை பறித்து அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ. 13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினர்.

பின்னர் அஜித்குமாரை முட்புதரில் தள்ளிவிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறித்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விபரத்தை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

From around the web