கருணைக் கொலை செய்யக்கோரி கலெக்டர் ஆபீஸ் வந்த மூதாட்டி..!

 
Trichy

திருச்சியில், தான செட்டில்மென்ட் பத்திரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மகன், தன் தாயாரை வீட்டைவிட்டு வெளியே துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி மேட்டுப்பாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி (80). இவருடைய கணவர் முனியாண்டி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு, வேலுச்சாமி என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

முனியாண்டி இறப்பதற்கு முன்பு, தனது சொத்துக்களை மகன் வேலுச்சாமி பெயரில் தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதி வைத்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வேலுச்சாமி, தன் தாயார் ராஜாமணியை வீட்டைவிட்டு வெளியே துரத்தியுள்ளார்.

இதையடுத்து ராஜாமணி, அவருடைய கடைசி மகள் அன்பரசி வீட்டுக்குச் சென்று அங்கு வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மகள் அன்பரசிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக ராஜாமணியை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளனர்.

இதனால் வாழ வழியின்றி தவித்த ராஜாமணி, தனது மகனுக்கு வழங்கிய தான செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்றோர் மற்றும் முதியோர் நலவாழ்வு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்யக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மூதாட்டி ராஜாமணி, ‘நீதி கிடைக்கவில்லை; என்னை கருணைக் கொலை செய்யுங்கள்’ எனும் வாசகம் எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு, திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (6ம் தேதி) மனு கொடுக்க வந்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள், மூதாட்டியின் கழுத்தில் மாட்டி இருந்த பதாகையை அகற்றிவிட்டு அவரை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். மூதாட்டியின் பிரச்னையை கேட்டறிந்த கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

From around the web