திமுகவுக்கு தேன்நிலவு காலம் முடிஞ்சி போச்சி... இனி முதல்வர் பதில் சொல்லிக்கொண்டே இருக்கணும்: குஷ்பு

 
Khushbu-Sundar

திமுகவுக்கு தேன்நிலவு காலம் 6 மாதம் முடிஞ்சி போச்சி, இனி முதல்வர் பதில் சொல்லிக்கொண்டே இருக்கணும் என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது.

இந்நிலையில், பாஜக பிரமுகர் குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மழை சேதத்தை ஆய்வு செய்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்த இதுவரைக்கும் நான் எந்த கேள்வியும் கேட்கல. ஆறு மாசம் வரைக்கும் தேனிநிலவு காலம் என்பதால் அதற்கு அப்புறம்தான் கேள்விகள் எழுப்புவேன் என்று சொல்லி இருந்தேன். திமுகவுக்கு தேனிலவு காலம் 6 மாசம் முடிஞ்சி போச்சி. அதனால கேள்வி கேட்க ஆரம்பிக்க போறேன். முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லிக்கொண்டே இருக்கணும்” என்றார்.

Khushbu-sundar-press-meet

சென்னை மழை வெள்ளத்திற்கு காரணமாக முதல்வர் ஸ்டாலின் முந்தையை அதிமுக ஆட்சியை குற்றம் சுமத்துகிறாரே என்ற கேள்விக்கு, “மழை தண்ணீர் சென்னையில் தேங்கியதும் அதிமுக ஆட்சியை குறை சொல்றார் ஸ்டாலின். கொளத்தூர் தொகுதியில் 10 வருசமா ஸ்டாலின் எம்.எல்.ஏவா இருக்கார். ஆனா அவர் தொகுதியிலேயே தண்ணீர் தேங்கி நிற்குது. கொளத்தூர்ல இன்னைக்கு வரைக்கும் முட்டி வரைக்கும் தண்ணீர் நிற்குது. நீங்க உங்க தொகுதியில என்ன வேலை பார்த்தீங்க? நீங்க உங்க தொகுதியை முன்னுதாரணமாக வச்சிருக்கணும்? அவர் அப்படி செய்யல. அதிமுக ஆட்சியில் வேலையே நடக்கல என்று ஸ்டாலின் சொல்கிறார்.” என்றார்.

கொளத்தூர் தொகுதியில் பாஜகவினரின் வெள்ள பாதிப்பு ஆய்வின்போது, அந்த வழியாக வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு காரை விட்டி இறங்கி வந்தார். அப்போது பாஜகவினர் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழக்கம் எழுப்பினர்.

Khushbu-sundar-press-meet

இதில் ஆத்திரமான அமைச்சர், இங்க என்ன நடக்குது? ஏன் இங்க கூட்டம்? என்று அதட்டலாக கேட்கவும், “மனு கொடுக்க வந்திருக்கோம்” என்றனர் பாஜகவினர். அமைச்சர் மிரட்டினார் என்று பாஜகவினர் குற்றம்சாட்ட, மிரட்டலுக்கு பயந்துவிட்டனர் பாஜகவினர் என்று திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, “திமுக என்னதான் ஆசப்படுறாங்களோ அது நன்றாகவே தெரியுது. வந்தே மாதரம் என்று சுதந்திர போராட்ட காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டு வர்றோம். இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்குது? அமைச்சர் சேகர்பாபு ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று தெரியவில்லை?” என்றார்.

From around the web