பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டில் நோயாளிகளை நலம் விசாரித்த முதல்வர்..! நாட்டிலேயே முதல்முறை!

 
CM-Stalin-Kovai

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடக்கிறது. தினசரி 30 பேருக்கு மேல் இறப்பு உள்ளது.

கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நோயாளிகளிடம் அருகில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கனிவாக நலம் விசாரித்தார். பிபிஇ கிட் அணிந்து இருந்ததால், மருத்துவர்கள் போல அருகில் சென்று நலம் விசாரித்தார். ஸ்டாலின் உடன் சில மருத்துவர்களும் உடன் இருந்தனர். முதல்வரே இப்படி நேரில் வந்து தன்னை விசாரிப்பதை பார்த்து நோயாளிகளும் நெகிழ்ந்து போனார்கள்.

எப்படி இருக்கீங்க.. மூச்சு விட முடியுதா.. சாப்பாடு நல்லா இருக்கா என்றெல்லாம் ஸ்டாலின் நோயாளிகளிடம் கேட்டார். அதோடு மருத்துவர்கள் எப்படி பார்த்துக்கொள்கிறார்கள், ஏதாவது தேவை இருந்தால் சொல்லுங்கள், சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள் என்றும் ஆறுதலாக முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் பேசினார்.

நாட்டிலேயே கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை எந்த மாநில முதல்வரும் இதுவரை சந்தித்தது இல்லை. மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டாலும் கூட, நோயாளிகளின் வார்டுக்கு முதல்வர்கள் யாரும் இதுவரை சென்றது இல்லை. ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் இப்படி நேரடியாக நோயாளிகளை சந்தித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மருத்துவமனையில் இப்படி ஆய்வு செய்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நேரடியாக முதல்வரே களமிறங்கி பணிகளை ஆய்வு செய்வதும், நோயாளிகளை சந்திப்பதும் மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கோவை மக்களுக்கு இது உணர்வு ரீதியாக நெருக்கத்தை கொடுத்துள்ளது.
 
இச்சூழலில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன் என்பது குறித்து முதல்வர் விளக்கமளித்துள்ளார். “கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பிபிஇ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்” என்றார்.

From around the web