தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

 
Local-Election

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அக்டோபர் 6-ந் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் கிராம ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு என 4 ஓட்டு போடவேண்டும்.

இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த மாவட்டங்களில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 106 கிராம ஊராட்சி தலைவர், 630 கிராம ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 789 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

From around the web