தமிழகத்தில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை - தமிழக அரசு

 
தமிழகத்தில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை - தமிழக அரசு

மே 1ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து மற்றும் படுக்கைகள் ஆகிவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக கடந்த முறை நடந்த விசாரணையின் போது, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும், மே 1-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு ஏன் ஊரடங்கு அமல்படுத்தக் கூடாது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, கொரோனா பரவலை கட்டுபடுத்த தேர்தல் முடிவுகள் வந்த பிறகு வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம் நிர்வாகத்தை நடத்துவதற்கான அதிகாரம் தற்போது இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒட்டுமொத்தமாக கட்சியினர் கூடுவதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து தலைமை வழக்கறிஞர் பேசிய போது, மே 2-ம் தேதி ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருபவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதே போல, மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் அரசு விடுமுறை என்பதாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த வருவார்கள் என்பதாலும் அன்றைய தினம் ஊரடங்கு அறிவித்தால் அவர்களை தடுக்கக் கூடிய சூழல் ஏற்படும். எனவே மே 1-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

From around the web