சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்!!

 
Traffic-Ramasamy

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார். அவருக்கு வயது 87.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் டிராஃபிக் ராமசாமி. ஆரம்பக் காலத்தில் அவர், தானே முன்வந்து சென்னை, பாரிமுனை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீசாருக்கு உதவிகளைச் செய்து வந்தார்.

இவரது சமூக பணி அந்த பகுதிகளில் டிராஃபிக் நெரிசலைக் கட்டுபடுத்த பெரிதும் உதவியது. இதையடுத்து போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அன்று முதல் அந்த பகுதி மக்களால் அன்புடன் டிராஃபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.

டிராஃபிக் ராமசாமி பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக தனி ஆளாக நின்று போராடியவர். இவர் நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளை தொடர்ந்து, அதன் மூலம் பல்வேறு சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டிராஃபிக் ராமசாமி, சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web