இன்னும் ஆறே மாதம்... மீடியாவை நாம் கண்ட்ரோல் பண்ணிடலாம்... பத்திரிகையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!

 
Annamalai

ஊடகங்கள் அனைத்தும் இன்னும் ஆறு மாதங்களில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை ஊடகத்திற்கான சுதந்திரம் நசுக்கப்பட்டே வருகிறது. மேலும், பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பத்திரிகையாளர்களை, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

தமிழ்நாட்டிலும் முன்னர் இருந்த அதிமுக அரசைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு ஊடகங்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பாஜகவினர் மிரட்டல் விடுத்து வந்தனர். இவர்களின் மிரட்டலுக்கு பணிந்து சில தனியார் செய்தி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய சம்பவங்களும் அரங்கேறின.

மேலும், தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் போதும் பாஜகவை சேர்ந்த நாராயணன் போன்றவர்கள் பகிரங்கமாகவே நெறியாளர்களுக்கும், விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். இதனால் நாராயணன் பங்கேற்கும் விவாதத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு, கேரளா மாநில ஊடகங்கள் மட்டுமே பாஜக அரசின் பொய், பித்தலாட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. இது பாஜகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. இதனால் இந்த மாநில ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.

அண்மையில் ஊடகங்களின் சுதந்திரத்தை நசுக்கும் தலைவர்கள் பட்டியலை ரிப்போட்டர் வித்தவுட் பார்டர் (ஆர்.எஸ்.எஃப்) என்ற அமைப்பு வெளியிட்டது. இதில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், மோடிக்கு எதிராகச் செய்தி வெளியிடுவோரை மிரட்டும் செயலில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டு பாஜக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலையின் பேச்சு ஆர்.எஸ்.எஃப் அமைப்பின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக உள்ளது.


அந்த வீடியோவில் பேசும் அண்ணாமலை,  “இந்த மீடியாவை நீங்கள் மறந்துவிடுங்கள். நம்மளைப் பத்தி பொய்யா செய்தி போடறாங்க, என்ன பண்ணலாம்.அதெல்லாம் நீங்க மறந்துடுங்க. அடுத்த ஒரு ஆறு மாதத்துக்குள் நீங்க பார்ப்பிங்க. அந்த  மீடியாவை நாம் கன்ட்ரோல் பண்ணலாம், கையிலெடுக்கலாம். அதப் பத்தி நீங்க ஒரி பண்ணிக்காதீங்க. காரணம் என்னவென்றால், தொடர்ந்து பொய்யான விஷயங்களை  எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. இத்தனைக்கும் இதற்கு முன் மாநிலத் தலைவராக இருந்த முருகன் ஐயா அவர்கள், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக  இருக்கிறார். எல்லா ஊடகங்களும் அவருக்குக் கீழேதான் வரப் போகுது. ஏனென்றால் தொடர்ந்து தப்புகள் நடக்க முடியாது.  தப்பான ஒரு செய்தியைத் தொடர்ந்து செய்யமுடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது நிச்சயம் உடைப்போம்” என்று பேசியுள்ளார்.

தனக்கு கிடைத்த இணை அமைச்சர் பதவியை வைத்து தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யப் போவதாக முருகன் கூறியிருந்த நிலையில், முருகன் செய்தி துறை அமைச்சர் ஆக்கப்பட்டதே மீடியாக்களை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்ற பொருள்பட பேசியிருக்கிறார் அண்ணாமலை.

From around the web