வாயை மூடு... நான் யார் தெரியுமா..? உன் யூனிபாஃர்மை கழற்றிவிடுவேன் போலீசாரை மிரட்டிய வழக்கறிஞர்!

 
Chennai

சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நடுரோட்டில் போலீசுடன் பெண் ஒருவர் மல்லுக்கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 7-ந் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கும் அதன் பின்னர் ஜூன் 14-ம் தேதி வரை சில தளர்வுகளுடனும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சேத்துபட்டு சிக்னலில் வழக்கம் போல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சுசீகி ஆல்டோ காரில் வந்த இளம்பெண்ணை வழிமறித்து, பயணத்திற்கான நோக்கம் குறித்து விசாரித்தனர்.

அந்த பெண் கூறிய பதிலை வைத்து, அவர் அத்தியாவசிய காரணங்களுக்குச் செல்லவில்லை என்பதை உறுதிபடுத்திய போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உடனடியாக அந்த இளம்பெண் செல்போன் மூலம் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கவே, பி.எம்.டபுள்யூ காரில் வந்திறங்கிய இளம்பெண்ணின் தாயார் போலீசாரை சகட்டு மேனிக்கு வசை பாட தொடங்கினார். எனது மகளின் காரை எப்படி நிறுத்தலாம் என கேட்டு ஒருமையில் வசைபாடினார்.

முகக்கவசம் அணியுமாறு கண்டிப்புடன் அறிவுறுத்திய போலீசாரை, மரியாதை குறைவாக போடா என திட்டிய அந்த பெண், நீ மட்டும் தான் வீடியோ எடுப்பியா? நானும் வீடியோ எடுப்பேன், எல்லா காரையும் நிப்பாட்ட வேண்டியது தானே என ஆரவாரம் காட்டினார்.

தன்னிலை அறியாமல் கத்தி கூப்பாடு போட்டதை அவருக்கு உணர்த்த முயன்ற போலீசாரை, வாயை மூடு என்றதோடு, தான் யார் என்று தெரியுமா? நான் ஒரு அட்வகேட், உங்க யூனிபாஃர்மை கழற்றிவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

கடைசிவரை போலீசாரின் பேச்சை சற்றும் இசைவு கொடுத்து கேட்காத அந்த பெண், தனது மகளை காரை எடுக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதை வீடியோவாக பதிவு செய்துள்ள போலீசார் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த நிலையில், அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


 

From around the web