கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்; சட்டத் திருத்த முன்வடிவு தாக்கல்

 
Secretariat

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என்று சட்டப்பேரவையில் சட்டத் திருத்த முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்துள்ள விளக்கத்தில், மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர்.

தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட் கூறானது முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது.

எனவே அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web