பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு... அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!!

 
Anna University

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இணையவழியில் நடத்தப்பட்டன.

அப்போது, தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரியில் பயிலும் பல மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் மே 3-ம் தேதி மறுதேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததாலும், ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் வரக்கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியதாலும் மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வளாக கல்லூரிகளுக்கான மறுதேர்வு மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல கடந்த பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் மே 17-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை  அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில், வரும் 14-ம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் 21-ம் தேதி முதல் நடைபெறும். அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 17-ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web