தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

 
Anna University

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைப்பெற்றது. ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர்.

அதில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 533 பேர் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். இந்நிலையில் www.tneaonline.org இணைய தளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு வரும் 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, 529 பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் விண்ணப்பித்திருந்தன. இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்காததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அங்கீகார விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றன. போதிய உள்கட்டமைப்பு, தகுதியான ஆசிரியர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏஐசிடிஇ மறுத்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதால், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது 11 ஆயிரத்து 284 பொறியியல் இடங்கள் குறைந்துள்ளது.

From around the web