பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை 35 ரூபாய்க்கு குறையும்.. விழுப்புரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

 
Annamalai

பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்கும் என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது.

எனினும் பெட்ரோல் மீதான தமிழ்நாடு அரசின் மாநில வரியை குறைப்பதாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அதன்படி 3 ரூபாய் வரி குறைக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு 100 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல் விலை, நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.99.58-ஆக விற்பனையானது. டீசல் விலை லிட்டர் ரூ.94.74-ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து, ரூ.99.80-க்கு விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலை மீண்டும் ரூ. 100-ஐ நெருங்கி உள்ளது. இதே போல் டீசல் விலை லிட்டருக்குக் 28 காசுகள் அதிகரித்து ரூ.95.02 ஆகவும் விற்பனையாகிறது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் விலை 35 ரூபாய்க்கு பாஜக அரசு குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் ஒருவர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, பாஜக ஆட்சி பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்கும். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என்று ஏன் சொல்கிறார் என்று புரியவில்லை.

 இதனை தமிழ்நாடு அரசு தான் விளக்க வேண்டும். பெட்ரோல் விலையை குறைக்க பாஜக தொடர்ந்து போராடும். திமுகவுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்..

From around the web