அனைத்து வழிபாட்டுத் தலங்களை எல்லா நாட்களிலும் திறக்க அனுமதி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 
CM-Stalin

தமிழ்நாட்டில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.  தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு விதித்து வருகிறது.

எனினும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.  கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் கல்லூரி விடுதிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.  இதேபோன்று, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், பல்வேறு தளர்வுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட உத்தரவில், “அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

From around the web