எதிர்த்து நின்றவர்களின் டெபாசிட் காலி: 1000 ஓட்டு வித்தியாசத்தில் மூதாட்டி வெற்றி..!

 
Localbody-election

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1 ஓட்டு, 2 ஓட்டு, 4 ஓட்டு வித்தியாசத்தில் பல வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், 90 வயது மூதாட்டி ஒருவர் 1,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின. அந்தவகையில், கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்ட கோவை வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டில் போட்டியிட்ட அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சண்முகம் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. அவருக்கு வேறொரு வார்டில் ஓட்டு இருந்ததால், தனது ஓட்டை கூட தனக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூர் மாவட்டம் மோர்தானா ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பரந்தாமன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடலூா் மாவட்டம் தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட மகாவதி என்பவர் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுகட்டி ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நதியா என்ற 22 வயதான பட்டதாரி பெண் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் 90 வயதான மூதாட்டி ஒருவர். இந்த மூதாட்டியின் பெயர் பெருமாத்தாள். இவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். வயது 90 நிரம்பிய நிலையிலும், அசராமல் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (12ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், மூதாட்டி பெருமாத்தாள் 1,558 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.

From around the web