சென்னையில் தனியார் விடுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு... சலசலப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதா.!

 
EPS-OPS

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து நேற்று முதல்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அவர் தனது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதால் வர இயலவில்லை. இன்று நல்ல நாள் என்பதால் நான் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், சசிகலா ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது. அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. குழப்பம் விளைவிக்கும் சசிகலாவின் முயற்சி வெற்றி பெறாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்தார். அரசு பங்களாவைக் காலி செய்த ஓ.பன்னீர் செல்வம், தற்காலிகமாக தி.நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். தற்போது அரசு பங்களாவிலிருந்து பொருட்கள் அந்த இல்லத்திற்கு மாற்றப்படும் பணிகள் நடைபெற்றுவருவதால் தனியார் விடுதியில் தங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பானது தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை காட்டுவதற்காக தான் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

From around the web