‘கலைஞர் உணவகம்’ அறிவிப்புக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்

 
OPS

‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக பேசியுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் பேச்சுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘அம்மா உணவகம்’ என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் செயல்படுத்துவது குறித்து நேற்று புது டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத் துறை அமைச்சர் அவர்கள், வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக பேசியுள்ளது ‘அம்மா உணவகம்’ என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களைத் தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, புதிதாகத் தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில், நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.

ஏழையெளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம், எனவே, இந்தத் திட்டம் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web