ரேஷனில் பொருட்கள் கிடையாது: பரவிய தகவலுக்கு அரசு விளக்கம்..!

 
Ration

அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சிலருக்கு ரேஷனில் பொருட்கள் கிடையாது என்று சமூக ஊடகங்களில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஒன்றிய - மாநில அரசு ஊழியர்கள், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகப் பெறுவோர், மூன்று அறைகளுக்கு மேல் உள்ள கான்கீரிட் வீடு வைத்திருப்போர், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷனில் பொருட்கள் இல்லை என்று, ‘நியூஸ் 18’ தொலைக்காட்சியின் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

New18

இந்நிலையில், இந்த செய்தி குறித்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Secretariat

அனைவரும் பாராட்டும் வண்ணம், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது, அரிசி பெற்று வரும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை அடையலாம் என தெளிவு படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இதுகுறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” என தெரிவித்துள்ளார்.

News18

உண்மை என்ன..?: கடந்த 2017ம் ஆண்டு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் ‘தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017’ என்பதை தமிழக அரசு வகுத்தது. அதன்படி, யாருக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் இல்லை எனும் செய்தி ‘நியூஸ் 18’ தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி வெளியானது. அந்த செய்திதான் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

From around the web