விரைவில் புதிய ஆட்சி! என்ன செய்யப் போகிறார் ரஜினிகாந்த்?

 
விரைவில் புதிய ஆட்சி! என்ன செய்யப் போகிறார் ரஜினிகாந்த்?

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் அடுத்து அமையப் போகும் ஆட்சி பற்றிய தெளிவான விடை கிடைத்துவிடும். மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்பதே கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது. எத்தனை இடங்களில் என்பதில் தான் பல யூகங்கள் நடமாடுகின்றன. இதெல்லாம் சும்மா, நாங்க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி!

அரசியலை விட்டு விலகி விட்டதாகச் சொன்ன ரஜினிகாந்த் அடுத்த ஐந்தாண்டுகள் என்ன செய்வார் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. ரஜினியின் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால், அவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஆளுங்கட்சியை அனுசரித்துப் போனவர் தான் என்பது தெரியும். ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதலமைச்சர் ஆன போதே அவரைப் பாராட்டிப் பேசியவர் தான் ரஜினி. 

ஆர்வக்கோளாறில் ரசிகர்கள் ஒட்டிய நேற்று எம்ஜிஆர்- இன்று ஜெயலலிதா-நாளை ரஜினி என்ற போஸ்டரில் தொடங்கிய பிரச்சனை 1995ம் ஆண்டு மணிரத்தினம் வீட்டு குண்டு வெடிப்பின் போது முற்றிப் போனது. பாட்ஷா விழாவிலும் அது ஒலித்தது. அதை ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் போயிருந்தால் ரஜினியின் பிம்பம் அன்றே சிதைந்து போயிருக்கும்.  1996ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தால், 2011ல் வடிவேலுக்கு ஏற்பட்ட நிலை தான் ரஜினிக்கும் ஏற்பட்டிருக்கும்.

அதை நன்றாக உணர்ந்ததால் தான் 2001ல் மீண்டும் முதலமைச்சர் ஆனதும் தைரியலட்சுமி என்று பாராட்டி பக்கத்திலேயே நின்று கொண்டார். கருணாநிதி, ஜெயலலிதா என இருவர் ஆட்சியிலும் அவர்களுக்கு நண்பர்கள் போல் காட்டிக்கொண்டார். இப்படிப் போனதால் தர்பார் வரையிலும் அவருடைய திரைப்பயணம் நீடித்துள்ளது என்பதே உண்மை. அதே வழியில் இப்போது, அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, என்னுடைய ஆருயிர் நண்பர் என்று முதல் ஆளாக பூங்கொத்துடன் சென்று வாழ்த்து தெரிவிக்க தயாராகிக் கொண்டிருப்பார் ரஜி்னி.

அவ்வளவு தான்ப்பா ரஜினி ஸ்டைல்!!

From around the web