இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

 
hindu-samaya-aranillaithurai

கோவில் நிதியில் துவங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகள் தவிர புதிதாக கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, ரூ.1,500 கோடி மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் 10 கோயில்களின் நிதியில் ரூ.150 கோடி செலவில் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் பரமத்திவேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் என, நான்கு இடங்களில் கல்லூரிகள் துவங்க அனுமதி அளித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6-ம் தேதி அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்து, கோவில் சொத்துக்களை உரிய நடைமுறைகளை பின் பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலைய துறை சட்டப்படி கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆயிரத்திற்கும் மேலான கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக சொத்து எதுவும் இல்லை என்றும் முதலமைச்சர் தொகுதி என்ற காரணத்தினால் அங்கு அவசரமாக கல்லூரி துவங்க படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கல்லூரிகளை துவங்குவது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு ஆட்சேபங்களை பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும் எனவும், கோவில் நிர்வாகத்தில் இருந்து எந்த விண்ணப்பமும் அளிக்கப்படாமலேயே கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கபட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோவில் நிர்வாகங்களும் கல்லூரி துவங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும், கோவில்களில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் கல்லூரிகள் அமைக்கப்படுவதாகவும், உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை பின்பற்றியே துவங்கப்படுவதாகவும், பல கோவில்களில் இருந்து பொது நிதிக்கு பெறப்பட்ட பங்களிப்பு நிதியில் இருந்து தான் கல்லூரிகள் துவங்கப்படுவதாகவும், மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்னும் 2,3 வாரங்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் எனத் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், கடந்த 11 ஆண்டுகளாக அறங்காவலர்கள் இல்லை எனவும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். எட்டு கல்லூரிகள் துவங்க முடிவெடுக்கப்பட்டு, கொளத்தூரில் ஒரு கல்லூரி துவங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோவில் நிதியை பயன்படுத்துவதால் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், சட்டப்படி தான் கல்லூரிகள் துவங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடிப்படை நடைமுறைகள் பின்பற்றாமல் துவங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகளின் செயல்பாடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.

அதேசமயம், நான்கு கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் துவங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் துவங்க வேண்டும் எனவும், கல்லூரி துவங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தாவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.

பின்னர் மனுவுக்கு 3 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 5 வாரங்கள் தள்ளிவைத்தனர்.

From around the web