நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே என் இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
CM-Stalin-speech-in-investor-meet

ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் லட்சியம் தொலைவில் இல்லை என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் அல்ட்ரா டெக் நிறுவனம் சிமென்ட் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளது. கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா நிறுவனம், சிமென்ட் அரைத்தல் ஆலையை தொடங்க உள்ளது. கிருஷ்ணகிரியில் மின் வாகனங்கள் ஆலையை டிவிஎஸ் மோடார் நிறுவனம் அமைக்க உள்ளது.

கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, “மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. முதலில் கொரோனா, அதில் முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். அதைதொடர்ந்து மழை, வெள்ளம், பாதிப்பு பகுதிகளில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டோம். இப்படி சோதனையான காலங்களில் கூட ஏராளமான முதலீடுகளை தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது.

வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும். கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும். மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.

 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் லட்சியம் தொலைவில் இல்லை.  தமிழ்நாட்டில் இரண்டு மற்றும் மூன்றாம் டைடல் பார்க் அமைக்கப்படும். இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக என்னை அறிவித்துள்ளனர். நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே என் இலக்கு” என்றார்.

From around the web