அலுவலகத்தில் பணம் எண்ணும் மெஷின்.. புகைப்படத்தால் சர்ச்சை: விளக்கம் அளித்த வானதி சீனிவாசன்!

 
 VanathiSrinivasan

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகத்தில் பணம் எண்ணும் மெஷின் இருப்பதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர் ஒரு காணொலி காட்சியில் பங்கேற்பது போல இருந்தது. அவர் அருகே மேஜையில் பணம் எண்ணும் மெஷினும் இருந்தது.

இந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்த பலரும், எம்.எல்.ஏ. அலுவகலத்தில் எதற்கு பணம் எண்ணும் மெஷின் என கேள்வி எழுப்பினர். இது வைரலாக பரவி வானதியின் பார்வைக்கும் சென்றுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ரேஸ் கோர்ஸில் மக்களை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தினால் நண்பரின் அலுவலகத்தில் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டேன். இது எனது அலுவலகம் அல்ல . கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்கு தெரியாது. அதற்குள் ஒரு சிலர் கற்பனை சிறகுகளை விரிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


உண்மை எதுவென்றே தெரியாமல் சமூக வலைதளம் இப்படித்தான் பலவற்றை கையாள்வதாக பலரும் வானதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். முன்னதாக வானதி பதிவிட்டுள்ள ட்வீட்டில், கோவை தெற்கு தொகுதியில் பார்வையிட்டது தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று எம். எல்.ஏ.வாக ஆனார் வானதி சீனிவாசன். அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற அலுவலகத்திற்குள் ‘தனலாபம்’ என எழுதி வைத்து பூஜைகள் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ‘தனலாபம்’ என எழுதி வைக்கப்பட்டிருந்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

From around the web