ஆளுநரை சந்தித்த மு.க ஸ்டாலின்... ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!

 
Governor-Stalin

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.

முதல்வராக பொறுப்பேற்க இருப்பவர் முறைப்படி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அக்கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும். இதுதான் சட்டமன்ற நடைமுறை ஆகும்.

அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 125 திமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் பங்கேற்றனர். அந்தவகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தில் 133 பேரும் கையெழுத்திட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்திட, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்திட திமுக சட்டமன்ற தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

திமுக சட்டமன்ற தலைவராக, திமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்து கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு இன்று காலை சென்ற மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க கோரினார். மு.க ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். இதையடுத்து  ஆட்சி அமைக்க வருமாறு மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க உள்ளார்.

வருகிற 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக கவர்னர் மாளிகை வளாகத்திலேயே எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது.

From around the web