நீதிமன்றமே திருப்தியடையும் அளவுக்கு எங்களுடைய பணிகள் தொடரும் - அமைச்சர் சேகர் பாபு

 
Sekarbabu

நீதிமன்றமே திருப்தி அடையும் வகையில் கோவில் நிலங்கள் மீட்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருச்செந்தூர் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

திருச்செந்தூர் கோவிலின் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று இருக்கிறது. கடந்த மாதத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்குத் தேதி நிறைவு பெற்றிருக்கிறது.

குடமுழுக்குடன் சேர்த்து அனைத்து அடிப்படைத் தேவைகளையும், நிறைவேற்றுவதற்கு உண்டான பணியைத் தொடங்குவதற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த மாதம் மீண்டும் ஒரு ஆய்வுக்கூட்டம் நடைபெறும். முதல்வர் இறுதி முடிவு எடுத்தபின் அதற்குண்டான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

மேலும், கோவில் நிலங்களைப் பராமரிப்பதில் அலட்சியம் நிலவுவதாக, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “நீதிமன்றத்தின் கருத்தில் அதிகமாக உள்ளே நுழையக் கூடாது. இருந்தாலும், நீதிபதிகளின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு, இன்னும் அவர்களே திருப்தியடையும் அளவுக்கு எங்களுடைய பணிகள் தொடரும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலமாக மாற்றுவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார்.

From around the web