தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வுக்கு ஒப்புதல் கையெழுத்திட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி!!

 
தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வுக்கு ஒப்புதல் கையெழுத்திட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி!!

தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை அனுமதித்து ஒப்புதல் கையெழுத்திட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்து வந்த நீட் தேர்வை, அவருடைய மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் அனுமதி அளித்து கையெழுத்திட்டவர் மாஃபா பாண்டியராஜன்.

பாஜகவின் மூத்த தலைவர் பிரமோத் மஹாஜனுடன் மும்பையில் பணிபுரிந்தவர், தமிழ்நாட்டில் மாஃபா என்ற மனிதவள நிறுவனத்தைத் தொடங்கினார் பாண்டியராஜன். தேமுதிகவில் முதலில் சேர்ந்தவர் பின்னர் அங்கிருந்து பாஜகவுக்குத் தாவினார். பாஜகவிலிருந்து அதிமுகவுக்கு தாவியவர் 2016ம் ஆண்டு தேர்தலில் ஆவடி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவரை ஜெயலலிதா அமைச்சராக்கினார், அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் நீடித்தார்.

மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட்டவருக்கு நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டமைப்பினர் கடுமையான சவால்களைக் கொடுத்து வந்தனர். அங்கே முகாமிட்டு அமைச்சருக்கு எதிரான களப்பணி ஆற்றினார்கள். அரியலூர் மாணவி அனிதாவின் வீடியோவை எடிட் செய்து அதிமுகவுக்கு ஆதரவாக அவர் வாக்கு கேட்பது போன்ற வீடியோவை வெளியிட்டு கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தார் பாண்டியராஜன்.

தற்போது ஆவடி தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. 94 ஆயிரத்து 141 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஆவடி நாசரிடம் 53 ஆயிரத்து 274 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார் மாஃபா பாண்டியராஜன். ஆவடி நாசர் 1 லட்சத்து 47 ஆயிரத்து 415 வாக்குகள் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கான எதிர்ப்பாக, மாஃபா பாண்டியராஜனின் தோல்வி அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. திமுக ஆட்சியில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு விலக்கு பெறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

From around the web