மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார்!!

 
Mythili-Sivaraman

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 81.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமாக இருந்தவர் மைதிலி சிவராமன். மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவரான இவர், கீழ்வெண்மணி துயரத்தை நேரில் சென்று விசாரித்து ஆங்கிலத்தில் தொடர் கட்டுரை எழுதியவர். அது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தினார்.

ஆந்திராவில் பிறந்த இவர் வளர்ந்தது, படித்தது சென்னையில் தான். அதனைத் தொடர்ந்து டெல்லியில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துவிட்டு அங்கு அரசின் நிதித்துறையில் பணியாற்றினார்.

பின்னர் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு ஐ.நாவில் வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையையும் உதறிவிட்டு இந்தியா வந்தார் மைதிலி. ஒரே நேரத்தில் சென்னையில் ஆறு நிறுவனங்களின் தொழிற்சங்கங்களை தலைமையேற்று நடத்தினார் இவர்.

முதுமை ஏற்பட்டதும் ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த இவரை, கணவரும், மகளும் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மறைந்த மைதிலி சிவராமன், கணவர் கருணாகரன், மகள் கல்பனா கருணாகரன் ஆகியோருடன் வசித்து வந்தார். மைதிலி சிவராமனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web