தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல்... அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!

 
ThaMoAnbarasan

தமிழ்நாட்டில் வரும் 13-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகளுடன் நேற்று (6ம் தேதி) ஆலோசனை நடத்தியது. இதனால், விரைவில் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது, “கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவில் திமுக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது.

13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட புத்தகப்பையை வீணாக்காமல், அதே புத்தகப்பையை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 13-ம் தேதி, உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தல் போல், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

From around the web