எம்ஜிஆருக்கு சிறுநீரகம் அளித்த அண்ணன் மகள் லீலாவதி காலமானார்

 
Leelavathi

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் எம்.ஜி.சி.லீலாவதி, இன்று சென்னையில் அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி. தனது சித்தப்பா, எம்ஜிஆருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கேரளத்தில் வசித்து வந்த லீலாவதி, செய்தித்தாள்கள் வழியாக இதனை அறிந்திருக்கிறார்.

உடனடியாக, தனது கணவரின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்த லீலாவதி, உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தைத் தானமளித்தார்.

ஆனால், லீலாவதிதான் தனக்கு சிறுநீரகத்தை தானமளித்தார் என்பதை முதலில் எம்ஜிஆருக்கு யாரும் சொல்லவில்லை. அவர் உணர்ச்சிவயப்படுவார் என்பதால், அவருக்கு தெரியப்படுத்தாமல் இருந்தார்கள்.

உடல்நலம் பெற்று திரும்பிய எம்ஜிஆருக்கு, சில நாட்களுக்குப் பின்னர் நாளிதழ் ஒன்றின் மூலம் தகவல் தெரிந்தது. வலம்புரி ஜான் எழுதியிருந்த வாழ்த்துரையில் ‘லீலாவதிக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் அறிந்ததும் லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்துக் கண்ணீருடன் நன்றி சொன்னார் எம்.ஜி.ஆர்.

இந்நிலையில், லீலாவதியின் மறைவு எம்.ஜி.ஆர் உறவினர்களிடமும், அதிமுகவின் தீவிர அனுதாபிகளிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web