கட்சிய நல்லா கொண்டு வந்துருவோம்... கவலைப்படாதீங்க... சசிகலா பரபரப்பு ஆடியோ

 
Sasikala

நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு கட்சிய வளர்த்தோம் என்று தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

சரி அமமுகவை வலுப்படுத்தி தேர்தலை சந்தித்து அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என கருதப்பட்டது ஆனால் அவரோ ஒரு நாள் இரவு திடீரென அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என தெரிவித்திருந்தார். இதனால் சசிகலா நிரந்தரமாக விலகுகிறேன் என சொல்லாமல் ஒதுங்குகிறேன் என சொல்லியுள்ளதால் காலம் கனியும் போது எப்போது வேண்டுமானாலும் அவரது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே சொல்லப்பட்டது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விட்டுக் கொடுக்க முடியாது என சண்டையிட்டு கொண்டனர். இருவரும் தனித்தனி லெட்டர் பேடில் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் சசிகலா பேசியதாக இரண்டாவது நாளாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அவர், கட்சிக்குள் பூசல் நிலவி வருவது குறித்து வருத்தம் தெரிவித்து விரைவில் மீண்டும் அரசியலுக்கு வந்துவிடுவதாக பேசுவதுப்போல் உள்ளது.

அந்த ஆடியோவில் சசிகலா பேசியதாவது, “இது கொரோனா நேரம், எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க. விரைவில் நல்ல முடிவு எடுக்கிறேன். சீக்கிரம் வந்துரலாம். கவலைப்படாதீங்க. அவங்க சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறத பார்க்குறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு கட்சிய வளர்த்தோம். அது வீணாகுறத பார்த்துட்டு இருக்க முடியாது. அதனால விரைவில வந்துருவேன்.

கொரோனா தாக்கம் குறைஞ்சதும் உங்க எல்லாத்தையும் பார்க்குறேன். கட்சிய நல்லா கொண்டு வந்துருவோம். கவலைப்படாதீங்க” என்று தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

From around the web