பொன்னாரை தோற்கடித்த விஜய் வசந்த்-க்கு குஷ்பூ வாழ்த்து! இன்னும் கட்சி மாறல்ல தானே!!

 
பொன்னாரை தோற்கடித்த விஜய் வசந்த்-க்கு குஷ்பூ வாழ்த்து! இன்னும் கட்சி மாறல்ல தானே!!

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட நடிகர் விஜய் வசந்த், தந்தை எச்.வசந்த்குமார் போலவே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணனை  1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே முன்னிலை வகித்து வந்த விஜய் வசந்த், முடிவில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 37 வாக்குகள் பெற்றிருந்தார். 

தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழுடன் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், “நமது அப்பச்சிக்கு, என் அப்பாவுக்குப் பிறகு எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்காக உங்கள் குரலாக இருப்பேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒத்துழைப்புடன் குமரி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்’ என்று கூறினார்.

பின்னர் வெற்றிச் சான்றிதழுடன் ட்விட்டரில் “நீங்கள் பரிசளித்த வெற்றிக்கு நன்றி” என்று பதிவிட்டு இருந்தார். விஜய் வசந்தின் இந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த நடிகை குஷ்பூ,”வாழ்த்துக்கள் தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தான் சார்ந்துள்ள பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர், வெற்றி பெற்றிருந்தால் மீண்டும் மத்திய அமைச்சர் ஆகியிருக்கக்கூடிய பொன் ராதா கிருஷ்ணனை தோற்கடித்த காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது, பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.


இன்னும் பாஜகவில் தானே இருக்கிறார் நடிகை குஷ்பூ? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. அரசியலில் நேரெதிரே போட்டியிடுபவர்களும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது தான் பண்பாடு என்ற அளவில் குஷ்பூ வின் இந்த வாழ்த்து பாராட்டுக்குரியதே!

காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் விஜய் வசந்துடன் குஷ்பூ நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பாஜகவுக்கு தாவுவதற்கு முன்னால் குஷ்பூ பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை விஜய் வசந்த் ஒருங்கிணைத்து இருந்தார்.


 

From around the web