கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி ட்வீட்

 
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி ட்வீட்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்த நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அரசு நிர்ணயித்த கொரோனா சிகிச்சை கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை நிர்ணயித்த அரசு அதனை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

From around the web