கனிமொழி திறந்த கல்வெட்டால் சர்ச்சை: ஒரு நிழற்குடைக்கு 1.54 கோடி ரூபாயா..?

 
Kanimozhi

நகராட்சியாக இருந்த தூத்துக்குடியுடன், சுற்றி உள்ள சில பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது, தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்கீழ் பூங்காக்கள், சாலைகள் விரிவாக்கம், நடைமேடைகள், மழைநீர் வடிகால் குழாய், நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வாகன நிறுத்தம், பொது கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், தூத்துக்குடி மில்லர்புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட நவீன பேருந்து நிழற்குடையை தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, நிழற்குடையின் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

Thoothukudi

அந்தக் கல்வெட்டில், திட்டத்தின் பெயர், திறந்து வைத்த நாள், திறப்பாளர் பெயர், தலைமை வகிப்பவர் பெயர், முன்னிலை வகிப்பவர் பெயர் மற்றும் மதிப்பீடு ரூ.154.00 லட்சம் என பொறிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ‘என்னது, ஒரு நிழற்குடை அமைக்க 1 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவா..?’ என்றும், ‘4 பெட்ரூம் உள்ள ஒரு பிளாட் வாங்கினாலே ஒரு கோடியைத் தாண்டாது; இந்த தகர ஷீட்டுக்கும், ஸ்டீல் ராடுக்கும் 1.54 கோடியா..?’ என, சமூக வலைதளங்களில் இந்த நிழற்குடை விவாதப் பொருளானது.

Thoothukudi

இந்நிலையில், “தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 8 பேருந்து நிழற்குடைகளும் அன்று திறக்கப்பட்டன. அதன் மொத்த மதிப்பு 1 கோடியே 54 லட்சம் ரூபாய்” என, தூத்துக்குடி மாநகராட்சி இணை ஆணையர் சரவணன் விளக்கம் அளித்தார்.

ஆனால், “ஒட்டுமொத்தமாக 8 நிழற்குடை அமைக்க ரூ.1 கோடியே 54 லட்சம் செலவு என்றால், அந்த கல்வெட்டில் ரூ.1 கோடியே 54 லட்சத்தில் அமைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது ஏன்..?” எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

From around the web