காஞ்சீபுரம் டாஸ்மாக் ஊழியர் படுகொலை; ரூ.10 லட்சம் நிவாரணம்... முதல்வர் அறிவிப்பு

 
CM-Stalin

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது. இதில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காஞ்சீபுரத்தில் கொள்ளையர்கள் தாக்குதலால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.  இதேபோன்று அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

From around the web