காமராசர் ஓர் அரசியல் அதிசயம்!

 
Kamarajar

இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும் பெருமிதம்

காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம் இது
கர்மவீரர் காமராசருக்கும் இது பொருந்தும்

முப்பது ரூபாய் கூடுதலாக அன்னையே கேட்டபோதும்
மறுத்தவர் தர மறுத்தவர் காமராசர்

தாய் வசித்து வந்த வீட்டிற்குக் கூட
தண்ணீர் குழாய் இணைப்பை வழங்காதவர்

திருமணம் புரியாமலேயே மக்களுக்காக
திருவாழ்வு வாழ்ந்த சிறந்த மாமனிதர்

தான் கல்வி அதிகம் கற்காவிட்டாலும்
தமிழகத்தை கற்க வைத்து அழகு பார்த்தவர்

கல்விப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியவர்
கல்வியாளர்கள் பெருகிட காரணமானவர்

சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்திய தீரர்
சகோதரர்களாக அனைவரையும் நேசித்த பண்பாளர்

பத்து வாங்கினால் ஒன்று இலவசம் உங்களுக்கு என்றனர்
பதினொன்றை அரசுக்கணக்கில் மகிழுந்தை சேர்த்தவர்

ஊழல் என்றால் என்னவென்றே அறியாதவர்
உத்தமராகவே உயிர் உள்ளவரை வாழ்ந்தவர்

நேர்மையின் சின்னமாக வாழ்ந்து உயர்ந்தவர்
நானிலம் போற்றும் மாமனிதராக வாழ்ந்தவர்

அரசியல்வாதிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
அறவாழ்வு வாழ்ந்து சிறந்தவர்

பகுத்தறிவுப் பகல்வன் தந்தை பெரியார்
பேசுவதை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்

எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வைத்தவர்
எல்லோர்க்கும் கல்வியை பொதுவாக்கியவர்

கக்கன் போன்ற நேர்மையான மனிதரை
காமராசர் அமைச்சரவையில் அமைச்சராக வைத்தவர்!

தொழிற்சாலைகள் பல கட்டித் தந்தவர்
தமிழகத்தில் அணைகள் பல கட்டியவர்

பாலங்கள் பல கட்டியவர் காமராசர்
பண்பான அரசியல்வாதியாக வலம் வந்தவர்

ஆகட்டும் பார்க்கலாம் என்று அறிவித்து விட்டால்
அப்படியே கோரிக்கையை நிறைவேற்றிக் காட்டியவர்

ஏழைப்பங்காளனாகவே இறுதிவரை வாழ்ந்தவர்
ஏழையாகவே இருந்தவர் பணக்காரன் ஆகாதவர்

ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து
ஒப்பற்ற திட்டங்கள் பல நிறைவேற்றி மகிழ்ந்தவர்

கல்வியோடு மதிய உணவும் வழங்கிய நல்லவர்
கல்வி ஏழைகளுக்கு கிடைத்திட வழிவகுத்தவர்

பிரதமர் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர்
பிரதமர் வாய்ப்பினை வேண்டாமென மறுத்தவர்

விருதுநகரில் பிறந்து புகழ்பல சேர்த்தவர்
விருதுகள் பலர் பெறுவதற்கு காரணமானவர்

சத்யமூர்த்தியை தலைவராகக் கொண்டவர்
சத்ய வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தவர்

கொடுமையான குலக்கல்வியை மூடியவர்
கடுமையாக யாரிடமும் நடந்து கொள்ளாதவர்

பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் திறந்தவர்
பலருக்கும் கல்வி கிடைத்திட காரணமானவர்

பாரத ரத்னா விருதை இறந்தபின் தந்தனர்
பண்பாளர் வாழ்ந்த போதே நீந்து இருக்கலாம்

காமராசரைப் போல அரசியல்வாதி இல்லை
காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே!

- கவிஞர் இரா.இரவி

From around the web