தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவு நியாயம்தானா..? சரத்குமார் கேள்வி

 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவு நியாயம்தானா..? சரத்குமார் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவு நியாயம்தானா என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால், அவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது. சிரமமில்லாமல் சுவாசிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் செயற்கையாக அளிக்க வேண்டியுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அவசரக் காலத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, வட இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கு ஆகும் செலவையும், நேரத்தையும் தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக வட இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் சிறு சிறு யூனிட்டுகளையும், சேமிப்பு கலன்களையும் அமைத்தால், அங்கே நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கிடும் நிரந்தரத் தீர்வாகவும் அமையும். தமிழகத்தில், தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து தான் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்ற சூழல் இல்லாத காரணத்தால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

From around the web