தடுப்பூசி முகாம்கள் நடத்துவது விளம்பர ஸ்ட்ண்ட்டா? உண்மையாகவே மக்கள் நலனில் நடிகை குஷ்பூவுக்கு அக்கறை இருக்கா?

 
Vaccination

ஜனவரி மாதம் தொடங்கிய போதிலும் ஏப்ரல் மாதம் வரையிலும் தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வந்தது. நடிகர் விவேக் இறந்த பிறகு தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கையின்மையும் அதிகரித்து விட்டது என்பதுவும் கள எதார்த்தமான உண்மை. அதிமுக ஆட்சியில் தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் வீணாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், கொரொனா தடுப்பு நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரமுகர்களும் தடுப்பூசிப் போட்டுக்கொண்டு அந்தப் படங்களை வெளியிட்டனர். மக்கள் இருப்பிடத்திற்கு அருகேயே தடுப்பூசி போட்டால் தான் வசதியாக இருக்கும் என்ற வகையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி, அது குறித்து அறிவிப்பு செய்து அதிகளவிலான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதால், அடுத்ததாக வரும் வரையிலும் ஜூன் 6ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலாளரும் அறிவித்துள்ளனர். தடுப்பூசி விவகாரத்தில் தமிழ்நாடு  அரசின் நடவடிக்கைகளைக் குறை கூறிய  பாஜக எம்.எல்.ஏவானதி சீனிவாசன், பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் பாஜக அரசிடமிருந்து கூடுதல் தடுப்பூசிகள் பெற்றுத்தரவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்நிலையில் மத்திய அரசு கொடுத்த 13 லட்சம் தடுப்பூசிகளை என்ன செய்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு என்று கேள்வியை எழுப்பியிருந்தார் நடிகை குஷ்பூ. அதற்குப் பதிலளித்த திரையுலகப் பிரபலமான தனஞ்செயன் மக்கள்நல்வாழ்வுத்துறைச் செயலாளரின் விளக்கத்தை குறிப்பிட்டு இதைப் பாருங்கள் மேடம் என்று கூறியிருந்தார்.

“எனக்குத் தெரிய்ம் சார். துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு தான் அதிக அளவில் தடுப்பூசியை வீணாக்கியுள்ளனர். மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தால் தமிழ்நாடு அரசு ஏன் தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும்?. ஏன் இந்த விளம்பர ஸ்டண்ட்?” என்று குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வராத காரணத்தால் தான் முந்தைய ஆட்சியில் அது வீணாகிப் போனது. அதைக் கேள்வி கேட்கும் நடிகை குஷ்பூ, வீணாகுவதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாம்கள் நடத்தி கையிருப்பில் உள்ள தடூப்புசிகள் அனைத்தையும் வீணாக்காமல் மக்களுக்கு செலுத்தினால் அதை விளம்பர மோகம் என்பது சரிதானா என்பதை நடிகை குஷ்பூ சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முடிந்தால் மத்திய அரசை வலியுறுத்தி குஜராத் போல், தமிழ்நாட்டிற்கும் தடுப்பூசி பெற்றுத்தரலாம். திறம்பட கையாண்டு தடுப்பூசி போட்டு வரும் அரசை விளம்பர மோகம் என்று விமர்சிப்பது குஷ்புவின் விரக்தியைக் காட்டுவதாகவே உள்ளது.

தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு நிரந்தர முடிவு கட்டும் தீர்வாகும். தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுக்கும் யாரும் மக்கள் நலன் மீது துளியும் அக்கறை இல்லாதவர்களே!

- மணி

From around the web