கோவையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்... முதல்வர் நாளை நேரில் ஆய்வு!!

 
CM-Stalin

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ள நிலையில், அங்குக் கொரோனா தடுப்புப் பணிகளை முடுக்கி விடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை செல்கிறார்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தான் ஒரு நாளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 3,937 ஆகக் குறைந்துள்ளது. எனினும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பரவலில் கோயம்புத்தூர் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது.

மாவட்டத்தில் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் உட்பட 38 ஆயிரத்து 336 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதிதாகச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 199 சாதாரணப் படுக்கைகளில் 159 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 40 படுக்கைகள் காலியாக உள்ளன.

ஆக்சிஜன் வசதிகொண்ட 747 படுக்கைகளில் 679 படுக்கைகள் நிரம்பி உள்ளன. 62 படுக்கைகள் காலியாக உள்ளன.தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள 40 படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

கோயம்புத்தூரில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களையும் பார்வையிட்டனர்.

கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் 200 ஆக்சிஜன் வசதி படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கியதை அடுத்து, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஊர்ப்புறங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 60 படுக்கை வசதி கொண்ட கொரானோ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 30 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவையாகும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலுக்கான காரணம், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

From around the web